ஆதரவாளர்கள்

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6.15 லட்சம் ஊதியம்

NLC  நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை!


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலைக்குச் சேர விரும்பும் என்ஜினீயர்கள் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள கேட் தேர்வை எழுத வேண்டும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6.15 லட்சம் ஊதியம் கிடைக்கும்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் பணிகளில் தகுதியுடைய என்ஜினீயரிங் பட்டதாரிகள் சேர்க்கப்பட உள்ளனர். மெக்கானிக்கல் துறையில் 27 பேரும் எலெக்ட்ரிக்கல் துறையில் 21 பேரும் கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் துறையில் 9 பேரும் சிவில் துறையில் 8 பேரும் கம்ப்யூட்டர் துறையில் 3 பேரும் மைனிங் துறையில் 10 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இந்தப் பணிகளில் சேர என்ன தகுதி வேண்டும்?

மெக்கானிக்கல் பிரிவில் சேர விரும்புபவர்கள் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் என்ஜினீயரிங் பட்டம் படித்திருக்க வேண்டும். எலெக்ட்ரிக்கல் பிரிவில் சேர விரும்புபவர்கள், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மைனிங் பிரிவில் சேர விரும்புபவர்கள் மைனிங் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பிஇ, பிடெக் அல்லது நான்கு ஆண்டு பிஎஸ்சி என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் பிரிவில் சேர விரும்புபவர்கள், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல் என்ஜினீயரிங் படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிவில் பிரிவில் சேர விரும்புபவர்கள், சிவில், சிவில் அண்ட் ஸ்ட்ரக்ச்சுரல் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பிரிவில் சேர விரும்புபவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷனில் முதுநிலைப் பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும். இந்த அனைத்துப் பிரிவுகளிலும் சேர, அந்தந்தப் பாடப்பிரிவுகளில் ஏஎம்ஐஇ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பட்டப் படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். அதேசமயம், குறிப்பிட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம். அந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழையோ அல்லது புரவிஷனல் சர்டிபிகேட்டையோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், இந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி 30 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் கிரீமி லேயர் அல்லாத ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும். இதேபோல, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கும் அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை உண்டு.

எலெக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் கேட் தேர்வில் இசி குறியீட்டுத் தேர்வையே எழுத வேண்டும். எந்தெந்தப் பாடப்பிரிவு மாணவர்கள் கேட் தேர்வில் எந்தத் தாளை எழுத வேண்டும் என்ற விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளுக்கு எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு குழு விவாதம், நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியுடையவர்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் பணிகளில் அமர்த்தப்படுவார்கள். இந்தப் பணிகளில் சேரத் தேர்வு செய்யப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6.15 லட்சம் ஊதியம் வழங்கப்படும். அத்துடன், இதர சலுகைகளும் உண்டு. இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கான பயிற்சிக் காலம் ஓராண்டு. சூழ்நிலையைப் பொருத்து அது நீட்டிக்கப்படலாம். இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், கூட்டு முயற்சி நிறுவனங்கள், துணை நிறுவனங்களில் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பணியமர்த்தப்படலாம். பணி நியமனத்தில் அரசின் இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும். பணியில் சேரத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பயிற்சிக் காலம் முடிந்து, குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பணியில் இருக்க வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ரூ. 1 லட்சத்துக்கான உறுதிப் பத்திரம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணிகளில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் கேட் (GATE) தேர்வை எழுத வேண்டும். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) மற்றும் ஏழு ஐஐடிக்கள் இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. நடைபெற உள்ள கேட் தேர்வை நடத்தும் பொறுப்பை கரக்பூர் ஐஐடி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய நகரங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த கேட் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் (கோர் பேங்கிங் வசதியுள்ள) செலான் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்பிய பிறகு, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் என்எல்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கேட் தேர்வுக்கு விண்ணப்பித்ததும் தேர்வு எழுதுபவர்களுக்குப் பதிவு எண் வழங்கப்படும். அதைக் கொண்டு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணியில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்கு: www.nlcindia.com,www.gate.iitkgp.ac.in/gate2014

கருத்துகள் இல்லை: