ஆதரவாளர்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

வேண்டாமே வெளிநாட்டு நிறுவனங்கள்! உரத்த சிந்தனை, ஆர்.ஜி.சந்திரமோகன்


பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011,22:56  
"சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடு தேவை' என, சில நாட்களுக்கு முன், மத்திய அரசு அறிவித்ததும், வணிகர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது; மத்திய அரசு பின் வாங்கியது. ஆயினும், திரும்ப கொண்டு வரும் எண்ணத்துடன் உள்ளது.

அன்னிய முதலீட்டை இந்தியாவிற்கு கொண்டு வர அரசு சொல்லும் காரணம் என்ன? "உற்பத்தியாளருக்கு நல்ல விலை கொடுப்பர், நுகர்வோருக்கு சகாயமான விலைக்கு விற்பர்' எனக் கூறுகிறது. "இதை செய்ய முதலீடும், திட்டமும் தேவை என்பதால், வெளிநாட்டு கம்பெனிகளை அழைத்து செய்ய வைக்கலாம்' என, மத்திய அரசு கூறுகிறது. குறிப்பாக அமெரிக்க, "வால்மார்ட்' நிறுவனத்தை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. அமெரிக்காவில், "வால்மார்ட்' என்ற பல்பொருள் வணிக நிறுவனம், 12 ஆயிரத்திற்கும், அதிகமான கடைகள் மூலம், தினசரி, இந்திய மதிப்பில், 6,400 கோடி ரூபாய் வணிகம் செய்கிறது. உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட, இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக, பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் இங்கு பணி புரிகின்றனர்.

இவர்கள், இவ்வளவு சிறப்பாக தொழில் செய்ய காரணம் என்ன? இவர்கள், நிறுவனத்தில் விற்பனை செய்யும் பொருட்களை உலகத்தில் உள்ள பல நாடுகளிலிருந்தும் வாங்குகின்றனர். வால்மார்ட்டிற்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று பொருள்களை தயாரிப்பவர்கள் அணுகினால், வால்மார்ட் அந்த நிறுவனத்தை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தை, வால்மார்ட்டை சேர்ந்த நிபுணர்கள் சோதனையிடுவர். சோதனையில் அவர்கள், தயாரிப்பாளர்களின் லாப, நஷ்ட கணக்குகளை சரி பார்த்து, பொருளை இன்னும் குறைந்த விலையில் எப்படி தயார் செய்வது என்று கற்றுக் கொடுப்பர். இயந்திரங்களை இடத்தை மாற்றி அமைப்பதிலிருந்து, வங்கிகளுக்கு கட்டும் வட்டியை குறைக்கும் வரை அனைத்தையும் செய்வர். சிக்கனமாக தயாரிக்க ஏற்பாடு செய்து, கடைசியில் கசக்கி பிழிந்து, அடிமாட்டு விலைக்கு சரக்கை வாங்குவர். அமெரிக்காவிலுள்ள தயாரிப்பாளர் ஒருவர் கேலியாக இப்படிச் சொன்னார்... "பொருளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், தவறு செய்கிறோம்; ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், இரு மடங்கு தவறு செய்கிறோம். காரணம், வால்மார்ட்டுக்கு விற்றாலும் லாபம் கிடைக்காது, மறுத்தால் விற்பனையே செய்ய முடியாது!'

அமெரிக்காவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், நுகர்வோருக்கு, 1950ல், 100 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட பொருளுக்கு, விவசாயிக்கு, 40 டாலர் கிடைத்தது. இன்று, 100 டாலருக்கு, விவசாயிக்கு கிடைக்கும் தொகை, 19 டாலராகக் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. "வால்மார்ட் போன்ற நிறுவனம் இந்தியா வந்தால், அனைத்தும் சரியாகிவிடும்' என, பலர் நினைக்கின்றனர். வால்மாட்டின் வளர்ச்சி, அமெரிக்க விவசாயிக்கு, 40 வருடம் முன் கிடைத்த விலையில், பாதி மட்டுமே கிடைக்க செய்கிறது. அமெரிக்க தொழில்கள் பல லாபகரமாக இயங்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவில் சூட்கேஸ், "டிவி' போன்றவை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. சீனாவிலிருந்தும், கொரியாவிலிருந்தும் சுமாரான தரமுடைய பொருள்களை, வால்மார்ட் விற்பனை செய்வது, அமெரிக்க தொழில் வளர்ச்சி மற்றும் பொருள்கள் விற்பனை பாதிப்படைய காரணமாக உள்ளது. வால்மார்ட், 50 ஆண்டுகளுக்கு முன், ஒரே கடையுடன் ஆரம்பமானது. அப்போது அமெரிக்கா ரொக்க வசதியுடன் இருந்தது; வால்மார்ட் அசுர வளர்ச்சி கண்டவுடன், ரொக்க வசதி மாறி, இன்று உலகிலேயே அதிக கடன் உள்ள நாடாகி விட்டது. வால்மார்ட் வளர்ச்சி, அமெரிக்க விவசாயிகளுக்கு, அமெரிக்க தொழில்களுக்கு, ஏன், அந்நாட்டு வளர்ச்சிக்கே உபயோகப்படவில்லை.

நம் நாட்டில், பத்து லட்சத்துக்கும் மேலானவர்கள், சிறு கடைகள் வைத்து பிழைக்கின்றனர். வால்மார்ட் போன்று நிர்வாகத் திறனும், வசதியும் இவர்களிடம் கிடையாது. ஆனால், இன்று சில்லரை வாணிபத்தில் அத்தியாவசிய பொருள்கள் பல, மிக குறைந்த லாபத்துக்கு விற்கப்படுகின்றன. உதாரணமாக, சமையல் எண்ணெய் கிலோ, 62 ரூபாய்க்கு உற்பத்தியாளர்கள் விற்றால், வணிகரிடம், 63 ரூபாய்க்கு கிடைக்கும். சர்க்கரை ஆலை விலை கிலோ 30 ரூபாய் என்றால், 31.50க்கு கடையில் கிடைக்கும். "கோணி விற்று லாபம் கிடைத்தால் போதும்' என்று, சர்க்கரை விற்பவர்கள் அதிகம். ஆயினும், காய்கறி, பழம் போன்றவை, பல கைகள் மாறி, நிர்வாகக் கோளாறினால் அழுகி சேதாரமடைகின்றன. நம் நாட்டில் விவசாயி, 15 ரூபாய்க்கு விற்கும் காய்கறி, பழங்கள், நுகர்வோருக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மேலை நாடுகளில், 40 ரூபாய்க்கு விவசாயி விற்பனை செய்தால், நுகர்வோருக்கு 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. இப்படி நடக்காமல் இருக்க, இந்தியாவில் கட்டுமானம் வேண்டும். பல கைகள் மாறுவதை தவிர்க்க வேண்டும்.

இது, வெளிநாட்டின் உதவி இல்லாமல் இந்தியாவில் முடியுமா? முடியும்! உதாரணமாக, இந்தியாவில் உள்ள ஒரு விவசாயி, பால் உற்பத்தியில் ஒரு நாளுக்கு, 4 லிட்டர் வரை தன்னுடைய ஒரு மாடு கொடுக்கும் பாலை கறந்து, விற்பனை செய்கிறார். அமெரிக்க விவசாயி, ஏறத்தாழ 400 ஏக்கரில், 300 மாடுகள் வளர்த்து, 8,000 லிட்டர் வரை ஒரு நாளுக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். ஒரு அமெரிக்க விவசாயி கொடுக்கும், 8,000 லிட்டர் பால் வாங்க, இந்தியாவில், குறைந்தது, 2,000 விவசாயிகளிடம், பல கிராமங்கள் சுற்றி, காலை, மாலை பால் வாங்கி சேகரிக்க வேண்டும். இந்தியாவில், பால்காரர், 20 ரூபாய்க்கு விற்கும் பால், நுகர்வோருக்கு, 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், அமெரிக்காவில் பால்காரர், 20 ரூபாய்க்கு விற்கும் பால், 60 ரூபாய்க்கு வால்மார்ட் நிறுவனத்தால் விற்கப்படுகிறது. நம் நாட்டில் பால் கொள்முதல் செய்யும் தொழில்கள் கட்டுமான வசதிகள் கொண்டுள்ளன. பால்காரர் கொடுக்கும் பால், தொழிற்சாலையால் வாங்கப்பட்டு, பல கைகள் மாறாமல் நுகர்வோரை சென்றடைகிறது. பாலில் செய்வதை நம் நாட்டில், வேறு விவசாய பொருள்களிலும் செய்ய முயற்சி இருந்தால் போதும். ஏற்கனவே கூறியபடி, அமெரிக்க விவசாயிக்கோ, உற்பத்தியாளருக்கோ, அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கோ, வால்மார்ட் பயன்படவில்லை.

இந்தியாவிற்குள் வால்மார்ட் நுழைந்தால், பெரிய இடம் எடுத்து, அதிக பொருட்களை வைத்து வாணிபம் செய்யும். அவர்களுடைய செலவினங்கள், வாடகை, சம்பளம் முதலியவற்றை நுகர்வோரிடம் தானே வாங்கவேண்டும். பாலோ, சர்க்கரையோ, எண்ணெயோ நம் ஊரில் உள்ள சிறு வியாபாரி குறைந்த லாபத்திற்கு விற்பது போல், வால்மார்ட்டால் விற்க முடியாது. சில வருடங்களுக்கு அசல் விலைக்கும் கீழேயே விற்கும் வசதி வால்மார்ட்டுக்கு உள்ளது. முதலில் சிறு வணிகர்கள் அடியோடு ஒழிக்கப்படும் வரை விலை குறைவாக கொடுப்பர்; பின், அவர்கள் நிர்ணயம் செய்யும் விலை தான். இதனால், விவசாயி, உற்பத்தியாளர், நாட்டுப் பொருளாதாரம் அனைத்தும் பாதிக்கும். சீனாவின் தரக்குறைவான பொருள்கள் நம்முடைய தலையில் கட்டப்படும். இங்கு செலவினங்கள், வாடகை கூடுவதால், நுகர்வோருக்கும் ஆரம்ப காலத்தில் கிடைக்கும் அடிமாட்டு விலை, பின்னால் கழுத்தைச் சுறுக்கும் கயிறாக மாறும். விலை தாறுமாறாக கூடும். இந்திய அரசு, விவசாயிக்கு, உறுதிபடுத்தப்பட்ட குறைந்தபட்ச கொள்முதல் விலையை (Minimum Support Price) அறிவித்து, அரிசி, கோதுமை கொள்முதல் செய்கிறது. மூன்றாண்டுக்கு முன், கோதுமைக்கு நல்ல விலை அறிவித்ததில், 10 லட்சம் டன் கொள்முதல் ஆண்டுக்கு வரும் என எதிர்பார்த்த இடத்தில், நல்ல விலை விவசாயிக்கு கிடைத்ததால், 18 லட்சம் டன்கொள்முதல் ஆனது.கொள்முதல் செய்த சரக்கில், பெரும் பகுதியைப் பாதுகாக்க அரசிடம் வசதி இல்லாததால், மழை, வெயிலில் சேதமடைந்தது. மூடிய கிடங்கு வசதி ஏற்பாடு செய்ய அரசு தவறியது. மேலும், எந்த பாதுகாப்பும் இல்லாத கோதுமையை எலிகள் கடித்து நாசப்படுத்தின. கோதுமை கொள்முதல் விலை குவிண்டாலுக்கு, 1,170 ரூபாயாக, 2010-11ல் அரசு அறிவித்தது. ஆனால், குஜராத்தில், 80 சதவீத விவசாயிக்கு கிடைத்த விலையோ, குவிண்டாலுக்கு, 950 முதல் 1,050 ரூபாய் வரை மட்டுமே. உத்தரபிரதேசத்திலும், 40 சதவீத விவசாயிகளுக்கு, இந்த உறுதிபடுத்தப்பட்ட குறைந்தபட்ச விலை கிடைக்கவில்லை. தேவையான கட்டுமானம் இல்லாததால், மத்திய அரசு கொள்முதலை ஊக்கப்படுத்தாததே இதற்குக் காரணம். இம்மாதிரியான குறைகளை தவிர்க்க, உள்ளூரில் உள்ள தனியாரை முதலீடு செய்ய வைத்து (Public Private Participation), அரிசி, கோதுமை முதலியவற்றை, உயரமான, "சைலே'க்களில் சேர்த்து வைத்தால், சேதாரத்தை தவிர்க்கலாம். நுகர்வோருக்கும், விவசாயிக்கும் சேதாரம் குறைந்து சகாயம் ஏற்படும்.

அப்படியிருக்க, வால்மார்ட்டின் வளர்ச்சிக்கு, நம் அரசும், நிர்வாகமும் ஏன் இந்த ஆர்வம் காட்டுகின்றனர்? முல்லா ஒருமுறை தெருவில், விளக்கு வெளிச்சத்தில், எதையோ தேடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த நண்பர், "என்ன தேடுகிறீர்கள்?' என்றார். முல்லா, "தொலைந்து போன காசை தேடுகிறேன்' என்றார். "எங்கே தொலைத்தீர்கள்?' என, நண்பர் கேட்க, "வீட்டில் தொலைத்து விட்டேன்' என்றார். "பின் ஏன் வீட்டில் தேடாமல், தெருவில் தேடுகிறீர்கள்?' என, நண்பர் கேட்க, முல்லா சொன்னார்... "வீட்டில் இருட்டாக உள்ளது. வெளிச்சம் தெருவில் இருப்பதால் இங்கு தேடுகிறேன்' என்றார். அதேபோல், உள்நாட்டுப் பிரச்னைக்கு, வெளிநாட்டில் தீர்வு கிடைக்கும் என, மத்திய அரசு எண்ணுகிறது. நாம் நம்முடைய சிறப்புகளை உணர்வதில்லை. இங்கு அரிசியையும், கோதுமையையும் பாழாக்கிக் கொண்டு, வெளிநாட்டவர் தான் நமக்கு விடிவு காலம் என எண்ணும் போக்கில் இருந்து வெளியே வரவேண்டும்.

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, சில அதிகாரிகள் வெளிநாடு செல்ல திட்டமிட்டனர். சென்னை விரிவாக்கத்துக்கு, வெளிநாடுகள் சென்று சுற்றிப் பார்த்து வருவதாக காரணம் கூறியிருந்தனர். விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து, அதிகாரிகளை காமராஜர் கூப்பிட்டு, "மதுரையில், அந்த காலத்தில் பாண்டிய மன்னர்கள், மீனாட்சி அம்மன் கோவிலை மையத்தில் வைத்து, அகலமான சாலைகளை திறம்பட அமைத்துள்ளனர். நகரம் அழகாக திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சென்று முதலில் பார்த்து வாருங்கள்' என்றார். பால் வளத்தில் உலகத்தில் முதல் நாடாக உருவாக அன்று, "அமுல்' நிறுவனம் திட்டமிட்டது. அத்திட்டம், இன்று, இந்தியா முழுவதும் அமலாக்கப்பட்டுள்ளது. இதே முறையில் மீதி விவசாயப் பொருட்களிலும் திறமையாக செயல்படுவது எப்படி என்று, தனியார் துறையை சேர்ந்தவர்களையும் கூப்பிட்டு அரசு யோசனை கேட்டால், சிறப்பாக செய்ய முடியும். பாலில் செய்வதை கோதுமையிலும், அரிசியிலும் செய்ய முடியாதா என்ன? இன்று, பால் உற்பத்தியில், உலகில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் மிக குறைந்த வித்தியாசமே உள்ளது.

நாமே கண்டுபிடித்த நல்ல மாடல் இது. அதை விட்டுவிட்டு, கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலையும் வேலை, வால்மார்ட்டை நம்புவது. முல்லா கதையைப் போல், நம் பிரச்னைக்கு வெளியிலிருந்து தீர்வு வரவே வராது. வயிற்றுவலிக்கு வைத்தியனிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டால், வலி படிப்படியாக குறைந்து நான்கைந்து நாட்களில் சரியாகி விடும். வயிற்று வலி உடனே நிற்க வேண்டும் என்று ஒருவன் டாக்டர் யாரையும் பார்க்காமல், மூட்டைப் பூச்சி மருந்தை வாங்கி குடித்தான்; வயிற்று வலி உடனே நின்று விட்டது. அதை தெரிந்து கொள்ள அவன் தான் உயிரோடு இல்லை. மாற்றுக் கட்சிகளை கலக்காமல், திடீரென மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்க நினைத்த முடிவு அனைத்து குடிமக்களையும் பாதிக்கும். Email: rgc@hatsun.com

- ஆர்.ஜி.சந்திரமோகன், தொழிலதிபர்/சிந்தனையாளர்

கருத்துகள் இல்லை: